ஒரு தீப்பொறியும் இரு பொறியாளர்களும்…

IMG_7704

கலைஞர் என்ற பெயர்
கருவிலிருந்தே ஒலித்துக் கொண்டிருந்தது…
என் தந்தையின் கரகர குரல்வழி…

தமிழ்க் காதல்கொண்ட பொறியாளர் அவர்.
கலைஞர் தமிழால் தீட்டிய கதைகளை
பகுத்தறிவு எண்ணங்களை என் தந்தை சொல்ல
அதைக் கேட்ட இரட்டை பின்னல் நாட்கள்…
மின்னலாய் கண்முன்.

என் வாழ்க்கையின் திருப்புமுனைகள்
அவரால் அமையும் என்று
அறியவில்லை நான் அன்று.

முதல் சந்திப்பு:

அண்ணா பல்கலைக்கழக மாணவியாக
கணிப்பொறிப் பூங்கா நிறுவிய அவர் முன் நின்று
இன்னொரு இளம் பொறியாளர் கொடுத்த வாக்கு
என் காதுகளில் ஒலித்தபோது.

“எங்கு சென்று படித்தாலும் வேலை பார்த்தாலும்
நாடு திரும்பி,
எங்கள் அறிவை தமிழ்நாட்டிற்கே தருவோம் ” என்று.

வாக்கு தந்தவர் நாடு திரும்பினார்.
எனையும் காதலால் வரவழைத்தார்.

எங்கள் கைகள் சேர்த்து
தன் குடும்பத் திருமணமாய் கொண்டாடியவர்
உலகம் வணங்கும் அப்பெருந்தலைவரே!

என் தந்தைவழி என் வாழ்வில் ஏற்றிய தமிழ்த்தீ,
என் கணவர்வழி, சுடர்விடக் காண்கிறேன்.

மனதில் மலைபோல் நிற்பவர்க்கு மரணம் ஏது?
என்றென்றும் எழுத்தாய் எண்ணமாய் என்னில்.